வியாழன், 10 டிசம்பர், 2009

சிங்கமும் சிட்டும்

இறைவன் ஒரு காட்டை ஆண்டு வந்தார். காடு மிகவும் பெரிதாக இருந்ததால், அதைத் தனித் தனி பிரதேசங்களாகப் பிரித்து அந்தந்த பிரதேசத்தில் வாழும் பிராணிகளிடம் ஆட்சியை ஒப்படைத்தார். அந்தப் பிராணிகள் நாம் அனைவரும் ஒரே காட்டின் குடிமக்களாக வாழ்வோம் என்று நல்லிணக்கத்தோடு வாழத் தொடங்கின.

காலச் சக்கர சுழற்சி அரையுகத்தைக் கடந்து விட்டது. ஆட்சியை அமைத்த பிராணிகள் வயதாகி சில மடிந்தும் விட்டன. எனவே, அந்த காலியான இடங்களை அப்பிராணிகளின் வாரிசிகள் நிரப்பத் தொடங்கின. அந்த வாரிசுகளுக்குத் தங்கள் முதாதையர்களின் புரிந்துணர்வுக் கொள்கை அவ்வளவாக எடுபடவில்லை. எனவே, கொஞ்சங் கொஞ்சமாக அடுத்த பிராணிக் கூட்டங்களின் உரிமைகளைப் புரக்கணிக்கத் தொடங்கின.

இந்தப் பரிணாமத்தில் சிங்கங் குட்டிகள் சிட்டின் கூட்டத்திலும் சேர்ந்து விட்டன. அந்தச் சிட்டுகள் உண்பதைப் போலவே உண்ணவும் தொடங்கி விட்டன. காலப்போக்கில் அவை உணவுக் குறைவால் உடல் சிறுத்தும் விட்டன. உடலோடு சிந்தனையும் சிறுத்து விட்டது.

ஐயோ பரிதாபம். தாங்கள் சிங்கக் குட்டிகள் என்பதையே அவை மறந்து போயின. தாங்கள் புஷ்டியான மாமிச உணவை உண்டு உடலைப் பெருக்க வேண்டும் என்பதைக் கூட அவை அறியவில்லை.

ஆட்சியில் இருந்த பிராணிகளுக்கு 10 பங்கு உணவு போதுமானதாக இருந்தது. எனவே, 10 பங்கு உணவு போதும் என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது. இது ஒரு சில சிங்கங்களுக்கு ஆத்திரத்தைக் கிழப்பி விட்டது. குறைந்தது 12 பங்கு உணவு உண்டால்தான் தங்கள் வம்சத்தைக் காக்க முடியும் என்று 12ம் தேதி 12ம் மாதம் பேரணிக்குப் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தன.

போகும் வழியில் ஒரு சிங்கம் சிட்டோடு சேர்ந்து விட்ட மற்றொரு உடல் சிறுத்துப் போன சிங்கத்தைச் சந்தித்து விட்டது. பழக்க தோஷத்தால் ஒன்றுக்கொன்று நலம் விசாரித்து பேசத் தொடங்கின.

முதல் சிங்கம் 12 பங்கு உணவு கேட்டு போராடப் போகிறோம் என்று சொன்னது.

10 பங்கு உணவு போதாதா? ஏன் பேராசைப் படுகிறீர்கள்? என்று சிட்டு குணம் தரித்த சிங்கம் கேட்டது.

அதற்குள் சிந்தனையால் சிங்கமாக வாழும் சிங்கங்களும் சிட்டாகச் சிறுத்துவிட்ட சிங்கங்களும் கூட்டம் கூடி விட்டன.

12 என்றன சிங்காரச் சிங்கங்கள்.

10 என்றன சிட்டாகிப் போன சிங்கங்கள்.

ஹா... ஹா... ஹா... பரிகாசச் சிரிப்பு தூரத்தில் இருந்து கேட்டது.

இதுதான் பரிணாமம். இப்போது பாதிக்குப் பாதி சிங்கங்கள் 10 பங்கு உணவு போதும் என்று கேட்கின்றன. இவர்கள் சண்டைக்கு மத்தியில் நாம் இன்னும் கொஞ்ச தந்திரங்களைப் பிரயோகிப்போம். இப்படியே போனால் நமது பரிணாமம் பூரணமாகி விடும் என்று கெக்கரித்தது. எவ்வளவுதான் அடக்கிக் கெக்கரித்தாலும் அந்தக் கர்வக் கெக்கரிப்பு கடாரம் முதல் கிழக்கு வரை கேட்கதான் செய்கிறது.

வெல்லப் போவது யாரு?

சிங்கமா - சிட்டா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக