புதன், 9 டிசம்பர், 2009

அபாயம் - 12 பாட கோரிக்கை

நாடு முழுவதும் பல இந்திய அமைப்புகள் எஸ்பிஎம் சோதனையில் மாணவர்கள் 12 பாடங்கள் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை எழுப்பு வருகின்றன.

இதில் ஓர் அபாயம் இருப்பதை நாம் உணர வேண்டும்.

நமது அரசாங்கம் தந்திர குணம் உடையது என்பதை நாம் உணர வேண்டும்.

12 பாட கோரிக்கையை நிறைவேற்றுவது போல் நிறைவேற்றி விட்டு, பின்னர் கூடுதலாக வேறு இரண்டு பாடங்களை எழுதுமாறு கட்டாயப்படுத்தக் கூடும்.

இந்திய அமைப்புகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு களைப்பாறிக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்படிப்பட்ட புதிய மாற்றங்களைக் கொண்டு வரலாம்.

அப்போது வலுவில்லாத பல இந்திய அமைப்புகள், போராடியது போதும் என்று தங்கள் உற்சாகத்தை இழந்திருக்கக் கூடும்.

எனவே, 12 பாடம் என்று சத்தமாகக் குரல் எழுப்புவதை விட, நமது உரிமைக்கு நிரந்தரமாக பாதிப்பு வராத வகையில் கோரிக்கை எழுப்ப வேண்டும்.

தமிழ் மொழியையும் தமிழ் இலக்கியத்தையும் மாணவர்கள் எடுப்பதற்கு எந்த ரூபத்திலும் தடை எழக் கூடாது என்ற கோரிக்கையையும் சேர்த்து எழுப்ப வேண்டும்.

இன்னொரு காரியத்தையும் கவனியுங்கள்.

எஸ்பிஎம் சோதனையில் நன்னெறி பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இந்திய மாணவர்கள் இந்தச் சோதனையை எடுத்து வருகின்றனர். ஆனால், அதில் எந்தப் பயனும் உண்டானதாகத் தெரியவில்லை. அடி, உதை, வெட்டு, குத்து என்று எல்லா கெடுதலான செயல்களும் நமது சமுதாயத்தில் தலைதூக்கி நிற்கின்றன. இதற்கு மகுடம் சூட்டுவது போல் மஇகா நிர்வாகித்து வரும் கூட்டுறவு கழகப் பொதுக் கூட்டத்தில் நடைபெற்ற குண்டர் கும்பல் அராஜகத்தைக் குறிப்பிடலாம். பத்திரிகைச் செய்தியைப் பார்த்தால் பள்ளிப் பருவ மாணவர்களே புத்ரா டீசட்டைகளை அணிந்து அராஜகத்தில் ஈடுபடுவதையும் போலிசார் தடுத்து வைத்திருப்பதையும் காணலாம். இந்த நன்னெறி பாடம் சமுதாயத்திற்கு எந்தப் பயனையும் கொண்டு வரவில்லை என்றுதான் சொல்கிறேன். இப்படிப் பயனில்லாத ஒரு பாடத்தைத் தேர்வில் சேர்த்துக் கொள்ள வேண்டுமா?

வருகின்ற 12.12.09ல் சனிக்கிழமை தோட்ட மாளிகையில் கூடுகிற தமிழார்வளர்கள் இதனையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக