வெள்ளி, 2 ஜூலை, 2010

இது காற்றில் வந்தக் (மொட்டைக்) கடிதம்

கல்வி அமைச்சசே, மீண்டும்


காதில் பூ சுற்றுகிறீர்களா?



தேசியப் பள்ளிகளில் தமிழையும் மென்டரினையும் கட்டாயப்பாடமாக்க வேண்டும் என்ற உமது பரிந்துரையை அறிந்து பலரும் மனம் பூரித்துப் போயிருப்பார்கள். ஆனால், எங்கள் நிலைமை அப்படியல்ல. இந்திய சமுதாயத்தை வஞ்சிப்பதற்கு மீண்டும் ஆடப்படுகிற ஒரு சித்து விளையாட்டு என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. எனது சந்தேகப் பார்வைக்குக் காரணம் என்ன என்பதை அறிய தொடர்ந்து வாசியுங்கள், புரியும்.



மூன்றாண்டுகளுக்கு முன்பு அப்போதைய கல்வியமைச்சராக இருந்த மாண்புமிகு ஹிசாமுடின், தேசியப் பள்ளிகளில் தமிழையும் மெண்டரினையும் பாட நேரத்தில் சேர்த்துக் கொள்ளப் போகிறோம் என்று அறிவித்தார். பல இயக்கங்கள் இதை ஆதரித்து அறிக்கை விட்டன. வேறு பல மாற்றுக் கருத்துகளைத் தெரிவித்தன. ஆனால், இது ஒரு ஜஞ்சி கோசோங் என்று என் மனம் பேசியது. இப்போது மூன்றாண்டுகள் கடந்து விட்டன. வாக்கு கொடுத்தவரும் வேறு அமைச்சுக்குச் சென்று விட்டார். அவரிடம் கேட்டால்கூட, தமக்கு ஞாபகம் இல்லை என்றுதான் சொல்வார். இப்போது நான் வேறு அமைச்சில் பணியாற்றுகிறேன். எனக்கு அதிகாரம் இல்லை. நீங்கள் இப்போதைய கல்வியமைச்சரிடம் கேளுங்கள் என்று நீண்ட பரிந்துரை கொடுப்பார்.



சரி, சரி புதிய கல்வியமைச்சரைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தலாம், வாருங்கள் என்று போனால், அப்படியா, அதைப் பற்றி எனக்குத் தெரியாது. நான் புதிதாக வந்திருக்கிறேன். எனக்கு அவகாசம் வேண்டும் என்று சொல்லி அனுப்ப நினைப்பார். இயக்கங்கள் சார்பாக வந்திருப்பவர்களும் அதற்குள் அழுத்துப் போய், தங்கள் சொந்த வேலைகளைக் கவனிக்கச் சென்று விடுவார்கள்.



இந்த அயர்வுநிலையைப் பயன்படுத்திக் கொண்டு, ஒரு புதிய அறிவிப்பு வரும். அப்படிதான் அமைந்திருக்கிறது உங்களுடைய தற்போதைய அறிவிப்பு. இப்போது நாட்டின் பிரதமராக இருக்கும் மாண்புமிகு நாஜிப்கூட 1995ம் ஆண்டில் கூறினார். தேசியப் பள்ளிகளில் தமிழையும் சீனத்தையும் போதிக்க முழு நேர ஆசிரியர் அமர்த்தப்படுவார் என்று. இன்று அந்த அறிவிப்பைப் பற்றி சமுதாயமே மறந்து விட்டது. இன்று வரைக்கும் எந்த தேசியப் பள்ளிகளிலும் ஒரு தமிழ் மொழி ஆசிரியர் கூட முழுநேரமாகப் பணிக்கு அமர்த்தப்படவில்லை. இப்போது சொல்லுங்கள். என்னுடைய அங்கலாய்ப்புக்கு காரணம் இல்லை என்று.....



இந்தப் 15 ஆண்டுக் காலத்தில் பள்ளிப் பருவத்தைக் கடந்த ஒரு தேசியப் பள்ளி மாணவனிடமாவது எதிர்ச்சொல், சேர்த்து எழுதுதல், ஒருமை-பண்மை, ஆண்பால்-பெண்பால் போன்ற அடிப்படை இலக்கணக் கேள்விகளைக் கேட்டுப் பாருங்கள். ஒன்றும் புரியாது அவர்களுக்கு. இந்தக் காலக்கட்டத்தில் மாணவர்களாக இருந்தவர்கள் கூடிய விரைவில் பெற்றோர்களாகி தங்கள் பிள்ளைகளையும் பள்ளிக்கு அனுப்பும் தருவாயில் இருப்பார்கள். கழுதை அறியுமா கற்பூர வாசனை. இப்படிப் பட்ட பெற்றோர்களுக்குத் தமிழின் அருமை எங்கே தெரியப்போகிறது? அவர்கள் எப்படித் தங்கள் பிள்ளைகள் தமிழ் கற்கிறார்கள் என்பதை உறுதி செய்து கொள்ளப் போகிறார்கள்?



இன்னொரு வெற்று வேட்டையும் ஞாபகப்படுத்துகிறேன். ஆத்திரப்படாமல் படியுங்கள். அதே 1995ம் ஆண்டில், செலாயங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த டான் சீ ஹாங் குண்டாங்கில் புதிதாக ஒரு தமிழ்ப் பள்ளியைக் கட்டப் போகிறோம் என்று அறிவித்தார். பத்திரிகையில் வாசித்துதான் அதைத் தெரிந்து கொண்டேன். அதைக் கேட்டு செலயாங் தொகுதி இந்திய வாக்காளர்களும் அவருக்கு ஓட்டுபோட்டு ஜெயிக்க வைத்தார்கள். அதைத் தொடர்ந்து 2 தவணைகளுக்கு அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் பதவி வகித்தார். இன்றளவும் குண்டாங்கில் அப்படியொரு தமிழ்ப் பள்ளி கட்டப்படவில்லை. சமுதாயமும் அதைப் பற்றி மறந்து விட்டது.



எனவே, இன்னும் ஒரு சில ஆண்டுகளில் என்ன புதிய வெற்று வேட்டுகளைக் கிளப்பி விடலாம் என்று இப்போதே சிந்திக்கத் தொடங்கியிருப்பீர்கள். ஆனால், நாங்களோ இந்த அரசாங்கம் பின்வரும் எங்கள் உரிமைகளை எப்போதாவது உண்மையோடு நிறைவேற்றப் போகிறதா என்று காத்துக் கொண்டிப்போம்.



1. தமிழுக்கும் சீனத்துக்கும் பாஹாசா ஆசிங் என்று அடைமொழி நீக்கப்பட்டு, எங்களின் தாய்மொழி என்று அங்கீகாரத்தைத் தர வேண்டும்.



2. ஒவ்வொரு தேசியப் பள்ளிகளுக்கும் குறைந்தது 5 மாணவர்கள் வீதம் ஓர் தமிழாசிரியர் அமர்த்தப்பட வேண்டும். பெரிய பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு தமிழாசிரியர் அமர்த்தப்பட வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் முதல் படி நிலை (வகுப்பு 1, 2, 3) மாணவர்களுக்கும் ஓர் ஆசிரியரும், இரண்டாம் படிநிலை (வகுப்பு 4, 5, 6) மாணவரகளுக்கும் ஓர் ஆசிரியரும் அமர்த்தப்பட வேண்டும்.



3. எங்கள் பிள்ளைகளின் பாட அட்டவைணையில் 3 பாட நேரம் (90 நிமிடம்) தமிழ் மொழி இடம் பெற்றிருக்க வேண்டும். அது நிச்சயமாக வெள்ளிக் கிழமை 11.30 - 2.00யில் இடம் பெற்றிருக்கக் கூடாது. பள்ளிகள் அந்த நேரத்தில் இயங்காமலும் கண்கானிப்பு இல்லாமலும் இருக்கும். ஏனென்றால், எங்கள் பிள்ளைகளின் பாதுகாப்புக்கும் பாட நடவடிக்கைக்கும் உத்திரவாதமும் இல்லாமல் இருக்கும் என்றுஅஞ்சுகிறோம்.



4. இந்தப் பாடத்துக்கு என்று தனியாக வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த வகுப்பறை காலியாக இருக்கிறது, அந்த வகுப்பறை காலியாக இருக்கிறது - அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். எங்களிடம் வேறு வகுப்பறைகள் கிடையாது என்ற சாக்குபோக்குகளைப் பள்ளித் தலைமையாசிரியர்களோ, முதல்வர்களோ கூறக் கூடாது. எங்கள் வகுப்பறைகள் சூரையாடப்படுகின்றன, மேசை நாற்காலிகள் உடைந்து போகின்றன, அதனால் தமிழ் மொழி பாடத்திற்கு எங்கள் வகுப்பறைகளைத் தரமாட்டோம் என்று பள்ளி ஆசிரியர்கள் கூறுவதை எங்கள் பிள்ளைகளால் சகித்துக் கொள்ளமுடியவில்லை.



5. எல்லா இந்திய மாணவர்களுக்கும் நிச்சயமாக தமிழ் மொழி பாடம் கட்டாயமாக்கப்பட வேண்டும். இது ஒரு விருப்பப்பாடம்தான். எனவே, யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்று எந்தத் தரப்பினரும் கூறக் கூடாது.



6. தேசியப் பள்ளி மாணவர்களும் யுபிஎஸ்ஆர், பிஎம்ஆர், எஸ்பிஎம் தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தை எடுப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். அவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றால், சான்றிதழ் பெறுவதற்கே தகுதியற்றவர்களாக்க வேண்டும்.



7. பள்ளி அளவிலான சோதனை என்றாலும், மாநிலக் கல்வி இலாகாவே தேசியப் பள்ளிகளுக்கான தமிழ் கேள்வித் தாள்களைத் தவணை சோதனைகளுக்குத் தயாரித்து, போதுமான நகல்களை ஒவ்வொரு பள்ளிக்கும் அனுப்ப வேண்டும். மாநிலக் கல்வி இலாகாவில் பணியாற்றும் தமிழ் மொழி துணை இயக்குநர் இதற்குப் பொறுப்பாக அமர்த்தப்பட வேண்டும். இப்பாடத்தைத் தேசியப் பள்ளிகளில் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விழுக்காடு, போஸ்ட் மோட்டர்ம் என்று துள்ளியமான ஆய்வறிக்கை மேற்கொள்ளப்பட்டு, சமுதாயம் அறியும்படி பத்திரிகையில் வெளியிட வேண்டும்.



8. தலைக்குப் பத்து ரிங்கிட் வீதம் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாண்யம் வழங்கப்பட வேண்டும். அந்த மாண்யம் எப்படி செலவிடப்பட்டது என்று பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் இந்தியப் பிரதிநிதிக்கும், மாநிலத் தமிழ்ப் பாட துணை இயக்குநருக்கும் அறிக்கை சமர்ப்பிக்கப்படவேண்டும்.



9. தேர்தல் காலங்களில் இந்தத் தமிழ் மொழிக்காக தேசிய முன்னணி எந்த அளவுக்குத் தங்களை அர்ப்பணித்திருக்கிறது என்று பிரச்சார அறிக்கையை வெளியிட வேண்டும். இந்த அறிக்கையும் உண்மையான நடப்பு நிலவரும் திருப்தியளிக்கும் வகையில் அமைந்திருந்தால் மட்டுமே நாங்கள் தேசிய முன்னணிக்கு வாக்களிப்போம்.



எனவே அமைச்சர் அவர்களே,

புதிய அறிக்கை விடுவதற்கு முன்பு இந்தக் கோரிக்கைகளையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இன்னொரு காரமான வார்த்தைகளைக் கக்க வேண்டும் என்ற அவசியம் இருக்காது என்று நாங்கள் நம்புகிறோம்.