புதன், 2 டிசம்பர், 2009

தமிழ்த் தாயைத் தீண்டாதே

தண்ணீரிக் கடியில் தூங்கிக் கொண்டிருந்த திமிங்கலத்தின் காதில் ஒரு சந்தடி.

திமிங்கலம் கண் விழித்து சுற்றும் முற்றும் பார்த்தது. காதை நாலா திசையும் திருப்பியது.

தமிழ் இலக்கியப் பாடத்திற்கு ஒரு தொல்லை.


எஸ்பிஎம் சோதனையில் மாணவர்கள் 10 பாடம் மட்டுமே எடுக்க முடியும் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பினால் இந்திய மாணவர்கள் இந்தப் பாடத்தில் எடுக்க முடியாத சூழ்நிலை. தற்போதைய சூழ்நிலையில் ஒவ்வொரு பள்ளியிலும் ஒரிரு மாணவர்கள்தாம் இப்பாடத்தை விரும்பி எடுத்து வந்தனர். அப்படியிருந்தும் ஆண்டு தோறும் ஆயிரம் மாணவர்கள்தாம் தேசிய நிலையில் இப்பாடத்தை எடுக்க முடிந்தது.

1982ம் ஆண்டில் கோலாலம்பூர் ராஜா அப்துல்லா பள்ளியில் இந்தச் சோதனையை எடுத்த ஒரே மாணவன் நான் மட்டும்தான். அப்போது மு.வ எழுதிய கரித்துண்டு என்ற நாவலை வாசித்து, ஏதோ எனக்குத் தெரிந்தவற்றை எழுதினேன். கற்றுக் கொடுப்பதற்கு ஆசிரியர்கூட இல்லை. மலேசிய சோதனை வாரியம் மாணவரிடம் எதை எதிர்பார்க்கிறது என்று தெரியாமல், எனக்குத் தெரிந்ததை எழுதி எட்டு என்ற கிரேட்டை எடுத்தேன். ஆனால், அதுவே எனக்கு மற்ற இலக்கியங்களை வாசித்து அனுபவிக்கும் பாக்கியத்தைத் தூண்டியது.

1990ம் ஆண்டுக்குப் பிறகு மலாயாப் பல்கலைக் கழகத்தில் தமிழ் பாடத்தை ஆங்கிலத்தில் அல்லது மலாய் மொழியில் மட்டும்தான் படிக்க முடியும் என்ற ஒரு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அப்போது பகாங் மாநில மணிமன்றச் செயலாளராக இருந்த நான் பகாங் இளைஞர்கள் மத்தியில் எதிர்ப்பலைகளைக் கிளப்பி விட்டேன்.

அறிவியலையும் கணிதத்தையும் ஆரம்பப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் கற்க வேண்டும் என்ற சட்டத்தை அரசாங்கம் 2003வது ஆண்டில் கொண்டு வந்தது. இதனை எதிர்த்து பல கட்டுகரைகளை ஓர் இணையத் தளத்தில் எழுதி வந்தேன். எதற்கும் மசியாத மகாதிர் அரசாங்கம் அதனைச் செயல்படுத்தி, தாக்குப் பிடிக்க முடியாமல் இப்போது யு-டர்ன் எடுத்துக் கொண்டிருக்கிறது. பல கோடி ரிங்கிட் நஷ்டமானதுதான் மிச்சம்.

ஏன் எங்கள் உரிமைகளைப் பரித்துக் கொண்டே இருக்கிறீர்கள்? இப்படிச் செய்வதால் நீங்கள் எப்படி லாபம் அடையப் போகிறீர்கள்? இந்திய மாணவர்கள் தமிழ் இலக்கியத்தைச் சோதனைப் பாடமாக எடுத்தால் உங்களுக்கு என்ன நஷ்டம் ஏற்பட்டு விடுகிறது? இந்தப் பிரச்சனை எங்கிருந்து தொடங்கியது?

2006ம் ஆண்டில் எஸ்பிஎம் சோதனையில் 16 பாடங்களை எடுத்த ஒரு மலாய் மாணவர் எல்லா பாடங்களிலும் ஏ எடுத்த பிறகு, சில சலசலப்பை ஏற்படுத்தி இருக்கலாம். இது போக கண்ணுக்குத் தெரியாத சில பாதகங்களை அரசாங்கம் உணர்ந்திருக்கலாம். ஆனால், இந்தப் பாட எண்ணிக்கைக் கட்டுப்பாடு எங்களை மிகவும் வேதனைப்படுத்துகிறது.

இந்திய சமுதாயத்திற்கு இதனால் பல பாதிப்புகள்.

1. மலேசிய மண்ணின் மனம் கமழும் தமிழ் இலக்கியவாதிகளை இனி நாம் காண முடியாது.
2. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் டிக்கெட் வாங்குவதற்கு இந்தப் பாடம் பலருக்குக் கைகொடுத்தது. இனி அதுவும் இல்லாமல் போகும். எனவே, தமிழாசிரியர்களின் பற்றாக்குறை ஏற்படப் போகிறது.
3. தமிழ்த் தகுதி இருந்தாலும் இலக்கியப் பால் அருந்தாத ஆசிரியர்கள்தாம் இனி தமிழ்ப் பள்ளிக்கு வருவார்கள். இப்படிப்பட்ட ஆசிரியர்கள் வெறும் கடமைக்காக மட்டும் தமிழையும் பிற பாடங்களையும் மாணவர்களுக்குப் போதிப்பார்கள். அறிவியல் ஆனாலும் சரி, கணிதம் ஆனாலும் சரி, ஆசிரியர்கள் நிச்சயம் இலக்கியப் பண்புகளை இப்பாடங்களில் திணிக்க முடியாது. விளைவு... இயற்கையின் அழகையும், தேசப் பற்றையும், மனித நேயத்தையிம் உள்வாங்கிக் கொள்ள முடியாத ஒரு வெற்று சமுதாயம் உருவாகப் போகிறது.

காலத்தின் கட்டாயத்தால் இந்த பிளாக்கரை உருவாக்கியிருக்கிறேன். மலேசியத் தமிழ் இலக்கியத்தில் அக்கறை கொண்டவர்கள் உங்கள் கருத்தை இங்கு எழுதுங்கள். இதில் ஒரு பிரச்சனை இருக்கிறது என்பதை நான் அறிவேன். தமிழ் ஆர்வலர்கள் பலர் தமிழ் யுனிகோர்ட் எழுத்தில் டைப் செய்ய முடியாத பிரச்சனைதான் அது. இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு நானே ஓர் ஆலோசனையை வழங்குகிறேன். உங்களுக்குப் பழக்கமான செயலியைப் பயன்படுத்தி, டைப் செய்து அந்த ஆவணத்தை எனக்கு இணைப்பாக (attachment) அனுப்புங்கள். எனது மின்னஞ்சல் முகவரி rawangjohnson@yahoo.com என்பதுதான்.

ஏறக்குறைய எல்லா விதமான செயலியிலும் உருவான ஆவணங்களை வாசிக்கக்கூடிய வகையில் என்னுடைய கணினியைப் பக்குவப்படுத்தி வைத்திருக்கிறேன். உங்களால் டைப் செய்ய முடியாவிட்டாலும் கையில் எழுதி, அதனை ஸ்கேன் செய்து எனக்கு அனுப்புங்கள். ஆங்கிலத்திலும், மலாயிலும், சாக்கடைத் தமிழிழும் (romanized Tamil) எழுதிகூட அனுப்பலாம். உங்கள் கருத்துகள் உங்கள் பெயரிலேயே பதிக்கப்படும். புனைப் பெயரில் எழுதுகிறவர்களும் தாராளமாக எழுதலாம். உங்கள் புனைப் பெயரிலேயே அவற்றைப் பதிப்பிப்பேன். உங்கள் மனக் கசப்புகளை அரசாங்கம் புரிந்து கொள்ளட்டும்.

இன்னும் கொஞ்ச காலத்திற்குத் திமிங்கலம் தூங்காமல்தான் இருக்கும். தமிழ் இலக்கியத்திற்கு விடிவு காலம் பிறக்கும் வரை....

2 கருத்துகள்:

  1. //இன்னும் கொஞ்ச காலத்திற்குத் திமிங்கலம் தூங்காமல்தான் இருக்கும். தமிழ் இலக்கியத்திற்கு விடிவு காலம் பிறக்கும் வரை.... //


    திமிங்க‌ல‌மே இனி உற‌க்க‌ம் கூடாது..

    தாய்மொழி க‌ல்வியை அனைவ‌ருக்கும் க‌ட்டாய‌ பாடாமாக்கும் வ‌ரை ஓய்வில்லை.

    பதிலளிநீக்கு
  2. ஒரு நாட்டின் சிறுபான்மை இனத்தவரின் மொழியையும் இலக்கியத்தையும் வளர்க்க எந்த அளவிலான முன்னேற்ற திட்டங்கள் வகுக்கப்பட்டு கையாளப்பட்டுள்ளன என்பதன் ஆய்வும் அதனையொட்டிய விமர்சனமும் மிக முக்கியமானவை. ஆனால் இங்கு அரசாங்க சார்பற்ற இயக்கங்களே தமிழ் இலக்கியத்தை வளர்க்க பல திட்டங்களை முன்னெடுக்கின்றன. குறைந்தபட்சம் கல்வி ரீதியிலாவது தமிழ் இலக்கியத்தைப் பயிற்றுவிக்க கற்பிக்க அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு தடையும் வரையறையும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம்.



    தமிழ் இலக்கிய அறிவும் மொழியறிவும் சிறந்த மொழி ஆளுமைமிக்க மாணவர்களை உருவாக்க துணைப்புரியும் என்பதை உணர்ந்து தேசிய ரீதியில் தமிழ் இலக்கியத்தையும் மொழியையும் அங்கீகரிக்கவும் அதன் தொடர்பான உயர் கல்வி மதிப்பீடுகளுக்கு அந்தப் பாடங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதையும் கல்வி அமைச்சு கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே ஒட்டு மொத்த இந்திய சமூகத்தின் கோறிக்கைகளாகும்.

    தமிழ் மொழி (நீக்குதல் - நீங்காமை) பின்விளைவுகள்
    http://bala-balamurugan.blogspot.com/2009/12/blog-post_07.html

    ஆக்கம்: கே.பாலமுருகன்
    சுங்கைப்பட்டாணி, மலேசியா
    http://bala-balamurugan.blogspot.com/

    பதிலளிநீக்கு